Also Watch
Read this
தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்து உள்ளார். தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் இந்த மசோதாவை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளார்.

மகளிர் இட ஒதுக்கீடு, வரவேற்பு
இதுதொடர்பாக, தவெக தலைவர் விஜய் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543ல் இருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட 'அரசியலமைப்பு - 131ஆவது திருத்தம் - மசோதா, 2026' மூலம், மக்களவை அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது.

குரல் ஒலிக்காமல் போகும்
மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, 'அரசியலமைப்பு 131ஆவது திருத்தம் - மசோதா 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும். அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கை வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கை, குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும்.

நிதிப் பகிர்விலும் பாதிப்பு
இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை. ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டு காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு ‘தண்டனை’யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு ‘வெகுமதி’யையும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை - விகிதாச்சாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும். ஏற்கனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்கு போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை.

கை விட வேண்டும்
தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படி பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு 131ஆவது திருத்தம், மசோதா 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும்,

தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தவெக தலைவர் விஜய் பதிவிட்டு உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved