Also Watch
Read this
குதிரை பேர விவகாரத்தில், ஏற்கெனவே விசாரணையை எதிர்கொண்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள புதிய வழக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து டெண்டர்கள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் திட்டமிட்டு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு புகார் - 41 இடங்களில் DVAC சோதனை
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, மாநிலம் முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் மேலாண்மை இயக்குநர் விசாகன் ஐஏஎஸ், முன்னாள் மூத்த மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர், ரதேஷ் ராஜ் சண்முகவேல், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து உள்ளது.

அமலாக்கத்துறை விசாரணையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ள FIRல், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து டெண்டர்கள், காலி அட்டைப் பெட்டி விற்பனை, மதுபான விநியோகம், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் திட்டமிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கரூர் கும்பல் தலையீடு
FIRன்படி, 857 டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதுடன், மூடப்பட்டதாகக் கூறப்பட்ட 284 பார்கள் உரிமம் புதுப்பிக்கப்படாமலேயே தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்பட்டதால் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் சுமார் 32 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், போக்குவரத்து டெண்டர்களில் டிமாண்ட் டிராஃப் தவறாக பயன்படுத்தப்பட்டு சில நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாகவும், கரூர் கும்பல் என குறிப்பிடப்பட்ட குழு, பார் உரிமையாளர்களிடம் கட்சி நிதி என்ற பெயரில் பணம் வசூலித்து அதிகாரிகள் மீது செல்வாக்கு செலுத்தியதாகவும் FIRல் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நியமனங்களில் வெளிப்புற தலையீடு
அதேபோல், மதுபான உற்பத்தி நிறுவனங்கள், பாட்டிலிங் நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் இணைந்து போலி இன்வாய்ஸ், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை மற்றும் லஞ்சம் மூலம் விநியோக ஆணை பெற்றதாகவும், குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே மதுபான விநியோகத்தில் முன்னுரிமை வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் கடைகளில் MRPஐ விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதும், அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் பணியமர்த்தலில் வெளிப்புற நபர்கள் செல்வாக்கு செலுத்தியதும், செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளி ரதேஷ் ராஜ் சண்முகவேல் அதிகாரப்பூர்வமற்ற பவர் புரோக்கராக செயல்பட்டு டாஸ்மாக் நிர்வாக முடிவுகளில் தலையிட்டதாகவும் FIRல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு இழப்பு
மேலும், கரூர் மற்றும் சுற்றுவட்டார அரசியல் செல்வாக்கு கொண்ட குழுவினர், பார் உரிமையாளர்களை மிரட்டி பணம் வசூலித்ததும், போலி ஆவணங்கள், நம்பிக்கை மோசடி, கையாடல், டெண்டர் முறைகேடு மூலம் அரசுக்கு பெருமளவில் நிதி இழப்பு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. கடந்த ஆண்டு அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் டெண்டர் முறைகேடு, போக்குவரத்து ஒப்பந்தங்கள், காலி பாட்டில் கொள்முதல், அதிக விலைக்கு மதுபான விற்பனை உள்ளிட்ட பல்வேறு முறைகேடு மூலம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என கண்டறிந்திருந்த நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், மதுபான உற்பத்தியாளர்கள், போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நெருக்கடி...
தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க குதிரைபேரம் நடந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் உள்ளிட்டோர், ஏற்கனவே விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிலையில், தற்போது டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருப்பது, செந்தில் பாலாஜிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.