Also Watch
Read this
சமூக நீதி சர்வே என்ற இந்த ஒற்றை அறிவிப்புக்காகவே முதலமைச்சர் விஜயை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என பாமக தலைவர் அன்புமணி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
ஆளுநர் உரையில்...
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி கூறி இருப்பதாவது;
மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பிறகு, தமிழ்நாட்டில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாமகவின் 46 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும். வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஒற்றை சமூக நீதி அறிவிப்புக்காகவே முதல்வர் விஜய்யை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதற்காக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் பாமக சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர் ராமதாசின்...
ஒரு மாநிலத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய அடிப்படையான தேவை அந்த மாநிலத்தில் வாழும் அனைத்து சமூக மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உள்ளிட்ட தரவுகள் தான். சமூக நீதி சர்வே எனப்படும் சாதிவாரி சர்வேயை நடத்துவதன் மூலம்தான் இந்தத் தரவுகளைத் திரட்ட முடியும். அதனால், தமிழ்நாட்டிலும், தேசிய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்புகளை தனித்தனியாக நடத்த வேண்டும் என்று 46 ஆண்டுகளாக பாட்டாளிகள் பாடுபட்டு வருகின்றனர். 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மருத்துவர் ராமதாஸின் அயராத முயற்சியால் வன்னியர் சங்கம் நிறுவப்பட்டபோது நிறைவேற்றப்பட்ட 3 தீர்மானங்களில் முதல் தீர்மானமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான்.

விஜய் உடன் சந்திப்பு
2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பின்னர், கடந்த மே 11ஆம் தேதி எனது இல்லத்திற்கு வந்து என்னை சந்தித்த முதல்வர் விஜய்யிடம், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூக நீதி சர்வே நடத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தினேன். அதன் தொடர்ச்சியாக கடந்த 5ஆம் தேதி சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, சமூகநீதி சர்வே எனும் சாதி வாரி சர்வேயை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம். தொடர்ந்து முதல்வர் விஜய்யை கடந்த 9ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சந்தித்து, அனைத்துக் கட்சிக் கூட்ட முடிவுகளை விளக்கியதுடன், சமூகநீதி சர்வே நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய், எங்களின் கொள்கையும் அது தான் என்று கூறி தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே நடத்தப்படும் என்று எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆளுநர் உரையில் அறிவிப்பு
இதனை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் உரையில் இன்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை எந்த பெயரில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்ததோ, அதே சமூக நீதி சர்வே என்ற பெயரில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 95 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பும், சமூக நீதி சர்வேயும் நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியான தருணம் சமூகநீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

எம்ஜிஆர் தொடங்கி...
தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்த வேண்டும் என்று 1980களில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் தொடங்கி, கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, மு.க.ஸ்டாலின் வரை கடந்த 46 ஆண்டுகளில் முதல்வராக இருந்த அனைவரிடமும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினோம். ஆனால், அவர்களின் ஆட்சிக் காலங்களில் இது சாத்தியமாகவில்லை. முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியில் தான் சமூக நீதி சர்வேயை சாத்தியமாக்குவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூக நீதி சர்வே நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிடச் செய்த தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்க்கு தமிழக மக்கள் சார்பில் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved