Also Watch
Read this
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணிகளை தொடர்ந்து, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று, தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை
இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பதாவது;
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம், தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம். திமுக அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்று தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.

தமிழரின் வரலாறு, நமது பண்பாட்டைக் குறைத்துக் கூறியும், சிதைத்து எழுதியும் வருவதோடு, வரலாற்றை திரிபுவாதங்களால் திசை திருப்பும் சூழ்ச்சிகளும் அரங்கேறும் காலத்தில், தமிழ்த் தொன்மை உண்மைச் சான்றுகளோடு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுதான் கீழடி, பொருநை, இரும்பின் தொன்மை.

தெற்கில் இருந்து தொடங்கி...
மண்ணுக்குள்ளும் ஆழ் கடலுக்குள்ளும் மறைந்திருக்கும் இன்னும் பல கீழடிகளை மேலே கொண்டு வருவோம். இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தெற்கில் இருந்து தொடங்கி எழுதுவோம். வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெறுவோம்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தங்கம் தென்னரசு பதிவு
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டிருந்ததை இணைத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமது கருத்தை பதிவிட்டுள்ளார். தங்கம் தென்னரசு தமது பதிவில் கூறி இருப்பதாவது;
தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டியில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அங்கு கண்டறியப்பட்டுள்ள தொல்பொருட்கள் மற்றும் வரலாற்றுச் சான்று குறித்து தொல்லியல் ஆய்வாளர்களிடம் கேட்டறிந்தேன்.

மக்கள் வாழிவிடப் பகுதியில் அமைந்திருந்த ஈராயிரம் ஆண்டுகள் பழமையான செங்கல் படிக்கட்டு கிணறு, கீழடியின் கண்டுபிடிப்புகளுக்கு ஒத்த கட்டுமானச் சுவடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பல்வேறு தொல் பொருட்களின் கண்டுபிடிப்பு, இந்த பகுதியின் தொன்மை, வரலாற்றுச் சிறப்பை வெளிப்படுத்துகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வு
வரலாற்றில் பல்வேறு காலங்களில், பொது மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டு உள்ள மலையடிப்பட்டி அகழாய்வு, கீழடி மற்றும் ஆதிச்சநல்லூரைப் போல, தமிழ்நாட்டின் தொன்மையான வரலாற்றுக்கு புதிய வெளிச்சம் பாய்ச்சும் முக்கியத்துவம் வாய்ந்த அகழாய்வாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழ் நிலப்பரப்பின் தொன்மை, தமிழர் நாகரிகத்தின் வரலாற்றை அறிவியல் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துரைக்கும் இதுபோன்ற தொல்லியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற வேண்டும்.
இவ்வாறு தங்கம் தென்னரசு பதிவிட்டு உள்ளார்.