Also Watch
Read this
‘அண்ணன் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதும், சட்டப்பேரவையில் வார்த்தை போர் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில்...
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது;
அண்ணன் பவருக்கு வந்தால், மாற்றம் வரும் என்றார்கள்; ஆனால், தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது, தவெக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின் வெட்டில் நம்பர் ஒன் தொகுதியாக பெரம்பூரை மாற்றி உள்ளனர். அண்ணன் பவருக்கு வந்தால், தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம், ஆனால் அண்ணன் கைக்கு வந்ததில் இருந்து, தமிழ்நாட்டில் பவர் போய்விட்டது என்று ஆளுங்கட்சியினர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.

அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
அப்போது, அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது;
தமிழ்நாடு மின்சாரத் துறையில், கடந்த 15 ஆண்டுகளில் எந்த கட்டமைப்புகளும் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக விரிவான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அந்த அறிக்கையில், மின்சாரத் துறையில் எத்தனை ஆட்கள் வேலைக்கு எடுக்கப்பட்டனர் என்பது பற்றி இருக்கும். இந்த துறையில் 70 ஆயிரம் பணியிடங்கள் உள்ளது. கடந்த பத்து நாட்களில் இதனை எல்லாம் சீரமைக்க 125 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்தக் குழுக்கள் எங்கெல்லாம் மின்வெட்டு உள்ளதோ, அதனை சரி செய்து விடுகிறது. மின்வெட்டு தொடர்பாக பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டு வைக்கக் கூடாது. எங்கெல்லாம் ஃபியூஸ் திருடப்பட்டதோ அவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஒவ்வொரு நாளும் 55 இடங்களில் மின் தட்டுப்பாடு ஏற்படுகிறது. அதில் 35 இடங்களில் சரிசெய்யப்படுகிறது.
இவ்வாறு நிர்மல் குமார் பேசினார்.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி...
அப்போது, மின்துறை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது;
கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்திற்கு 393 துணை மின் நிலையங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் பெரும்பான்மையாக முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் புதியது, பழுதடைந்தது என 90 ஆயிரம் மின் மாற்றிகள் சீரமைக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை அதிகரிக்கும்போது, அதற்கான ஏற்பாடுகளை நிர்வாக ரீதியாக சரிசெய்வது அரசுடைய கடமை.

ஒரு அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்முறையாக அந்த துறையுடைய அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டங்களை நடத்தி என்னென்ன குறைபாடுகள் உள்ளன. அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்று செய்வது அரசுடைய கடமை, துறையுடைய கடமை. எனக்கு தெரிந்தவரை இதுவரை மின்துறையில் அதிகாரிகளின் கூட்டம் நடைபெறவில்லை. இதையே தான், அங்கு பணியாற்றுபவர்களும் கூறுகிறார்கள். இப்போது இருக்கக் கூடிய பணியாளர்களை வைத்துதான் கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்தை கொடுத்தோம். எனவே கடந்த காலங்களில் இருக்கக்கூடிய குறைகளை தொடர்ச்சியாக ஒரே கருத்துகளை முன்வைப்பதைவிட, இந்த அரசு துறையின் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி சீரான மின் விநியோகம் செய்ய இந்த அரசு முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செந்தில் பாலாஜி பேசினார்.

சிபிஐ வழக்குப்பதிவு
தொடர்ந்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், "90 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதில், 40 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் வாங்கியதற்காக சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மின்துறை தொடர்பாக, 2 நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்," என்று தெரிவித்தார்.