Also Watch
Read this
By: Fyrose Banu

புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி கடற்கரைப் பகுதியில், அடையாளம் காண முடியாத விசித்திரமான மீனினங்கள் திடீரென கரை ஒதுங்கியுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரை ஒதுங்கிய விசித்திர மீன்கள்
கற்பிட்டி கடற்கரைப் பகுதிக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், கடலில் இருந்து ஏராளமான விசித்திர மீன்கள் அலையோடு அலைகளாகக் கரைக்கு வந்தன. வழக்கமான மீன்களைப் போல் அல்லாமல், விசித்திரமான தோற்றத்தைக் கொண்டிருந்த இந்த மீன்கள், சிறிது நேரம் கரையில் காணப்பட்ட பின் மீண்டும் கடலுக்குள்ளேயே சென்றன.
அச்சத்துடனும், வியப்புடன் கண்ட பொதுமக்கள்
இந்தக் காட்சியை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர் மக்களும் வியப்புடன் பார்த்ததுடன், தங்கள் கைபேசிகளிலும் படம் பிடித்துள்ளனர். பொதுவாகக் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் அல்லது நில அதிர்வுகள் போன்றவற்றுக்கு முன்னதாக, கடல் வாழ் உயிரினங்கள் தங்களது வாழிடத்தை விட்டு வெளியேறுவது வழக்கம். அந்த வகையில், இந்த மீன்களின் வருகை ஏதேனும் சுனாமி அல்லது நிலநடுக்கம் குறித்த முன்னெச்சரிக்கை அறிகுறியோ என்று கடலோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மீன் வகைகளைச் சேர்ந்தவை அல்ல
கரை ஒதுங்கிய மீன்கள் வழக்கமாக இந்தப் பகுதியில் காணப்படும் மீன் வகைகளைச் சேர்ந்தவை அல்ல என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டுப் பயணிகள் முன்னிலையிலேயே இந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்த மீன்கள் எவ்வகையைச் சேர்ந்தவை மற்றும் ஏன் கரைக்கு வந்தன என்பது குறித்து முறையான கடல்சார் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடல் மட்டத்தில் ஏற்படும் தட்பவெப்ப மாற்றங்கள் அல்லது நீரோட்டப் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும் மீன்கள் இவ்வாறு திசைமாறி கரைக்கு வர வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.