Also Watch
Read this
மறைந்த திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. தந்தை பாக்யராஜ் உடலுக்கு மகன் சாந்தனு தீ மூட்டி கண்ணீருடன் விடையளித்தார்.

தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நடைபெற்ற இயக்குநர் பாக்யராஜ் இறுதிச்சடங்கில், 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.

மறைந்தார் பாக்யராஜ்
தமிழ்த் திரையுலகின் மகத்தான ஆளுமையாக போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், மாரடைப்பால் சென்னையில் நேற்று ஜூன் 27ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 73. அவரது உடலுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.


இறுதி ஊர்வலம்...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து இன்று ஜூன் 28ஆம் தேதி காலையில் பாக்யராஜ் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் பாக்யராஜ் உடலுக்கு மலர்களை தூவி இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வல வாகனத்தில் மனைவி பூர்ணிமா, மகன் சாந்தனு ஆகியோர் இருந்தனர். ஊர்வல வாகனத்தை சுற்றிலும், ஏராளமானோர் நடந்தும், வாகனங்களிலும் மின் மயானம் வரை வந்தனர்.

முழு அரசு மரியாதை, அமைச்சர்கள் பங்கேற்பு
பெசன்ட் நகர் மின் மயானத்தில் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாக்யராஜ் உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அவரின் இறுதி சடங்கில் தமிழக அமைச்சர்கள் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர். பாக்யராஜின் உடலுக்கு அவரது மகன் சாந்தனு இறுதி சடங்குகளை செய்தார். அதன் பின்னர், பெசன்ட் நகர் மின் மயானத்தில் பாக்யராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.