Also Watch
Read this
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை, சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். சிங்கப் பெண் அதிரடிப் படைக்கான காவல் வாகனத்தை அறிமுகப்படுத்தி, இயக்கிப் பார்த்த முதலமைச்சர் விஜய், இத்திட்டம் தனது மனதுக்கு நெருக்கமான திட்டம் எனக் கூறியதோடு, இத்திட்டத்திற்கான பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
பதவி ஏற்பு விழா மேடையில்...
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதலமைச்சராக பொறுப்பேற்ற தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழா மேடையிலேயே மக்கள் முன்னிலையில் வைத்து மூன்று முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டார். அவற்றில் ஒன்று தான் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுப்பதற்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டம். சிங்கப்பெண் அதிரடிப் படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டு, ஒரு எஸ்.பி. 2 டிஎஸ்பிக்கள் மற்றும் 4 ஆய்வாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட போலீசாரும் நியமிக்கப்பட்டனர். இந்த படையில் இடம்பெறும் பெண் காவலர்களுக்காக பிரத்யேக சீருடை உருவாக்கப்பட்டு, பிரத்யேகமாக ரோந்து வாகனங்களும் வடிவமைக்கப்பட்டன.

தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய்
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக, விழா நடைபெறும் மைதானத்திற்கு வந்த முதலமைச்சர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.
சிங்கப்பெண் சிறப்புப் படை இலச்சினை
தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், திட்ட தலைமை அதிகாரி பவானீஸ்வரி உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்கள் என திரளானோர் விழாவில் கலந்து கொண்டனர். முதலாவதாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் இலச்சினையை முதலமைச்சர் விஜய் வெளியிட, அதனை திட்ட தலைமை அதிகாரி பவானீஸ்வரி ஐபிஎஸ் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் அதிரடி நடவடிக்கை தொடர்பான டீசரையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

ரோந்து வாகனத்தை இயக்கிய முதல்வர்
அதன் பின்னர் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரோந்து வாகனங்களை அறிமுகப்படுத்திய முதலமைச்சர், முதல் ரோந்து வாகனத்தை தானே இயக்கி பார்த்தார். தொடர்ந்து விழா பேருரையாற்றிய முதலமைச்சர் விஜய், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைக்கும் இந்த விழா தனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என தெரிவித்தார்.
போதைப்பொருள் நடமாட்டமே முக்கிய காரணம்
போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சமூக ஒழுங்கும் சம்பந்தப்பட்டது என தெரிவித்தார். பெண்கள் பாதுகாப்புக்கு இடையூறு செய்யும் யாரையும் சகித்துக் கொள்ள முடியாது என்றும், அவர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரித்த முதலமைச்சர், அதே சமயம் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக் கூடாது என்றும் கூறினார்.

முதல் முறையாக ட்ரோன் மூலமாக கண்காணிப்பு
சிங்கப்பெண் சிறப்பு படைக்காக முதற்கட்டமாக 354 கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கப்பட இருப்பதாகவும், இத்திட்டத்திற்காக 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அதிநவீன வசதிகள் கொண்ட வாகனங்கள், நவீன உபகரணங்கள், தொழில்நுட்ப சாதனங்களும் ஒதுக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தார். டிரோன் வாயிலாக பேட்ரோல் உருவாக்கப்படும். இந்தியாவிலேயே, முதன்முறையாக டிரோன் மூலம் கண்காணிக்கப்படும். பெண்களுக்கான மரியாதை மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமை என்று உறுதியளித்த முதலமைச்சர், பெண்களும், குழந்தைகளும் மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே ஒரு அரசின் முழுமையான வெற்றி என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved